நமது நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாகத் தங்கம் விலை கேப் விடாமல் சரிந்து வருகிறது. இதனால் மக்கள் பயங்கரக் குஷியில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை இந்தளவுக்குக் குறைய என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது எந்தளவுக்குப் போக வாய்ப்பிருக்கிறது என்றும் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தங்கம் விலை கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9470 வரை உயர்ந்தது. தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொட்டது அதுவே முதல்முறை. ஆனால், அதன் பிறகு புவிசார் அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது.
தங்கம் விலை
கடந்த 13 நாட்களில் தங்கம் விலை பல நாட்கள் குறைந்துள்ளன. இருப்பினும், இன்று விலை சற்று உயரலாம் என்றே தெரிகிறது. ஆனாலும், இவ்வளவு நாள் தொடர்ந்து சரிந்து வந்துள்ளதால் மக்கள் பயங்கர மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதிலும் ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், தங்கம் வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும், நமது நாட்டில் திருமண சீசனும் வரும் சூழலில் தங்கம் விலை சரிந்துள்ளது மக்களுக்கு சூப்பர் விஷயமாகவே இருக்கிறது.
ஆனந்த் சீனிவாசன்
அதேநேரம் தங்கம் விலை இன்னும் எந்தளவுக்குக் குறையும்.. இது மேலும் குறைய வாய்ப்பிருக்கிறதா.. இல்லை மீண்டும் உயர ஆரம்பித்துவிடுமா என்பது குறித்து மக்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “தங்கம் விலை கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ரூ.9200க்கு கீழ் வந்துவிட்டது. எனவே, தங்கத்தை வாங்க விரும்புவோர் வாங்கலாம். ஆனால், இது ரொம்ப இறங்குமா இறங்காதா என்றெல்லாம் சொல்ல முடியாது. குறிப்பிட்ட விலைக்குக் கீழ் போகச் சீனாவும் ரஷ்யாவும் விடாது. என்னைப் பொறுத்தவரை ரூ.8500 அல்லது ரூ.8500ஐ சொல்வேன். ஆனால், அவ்வளவு தூரம் குறையுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
ஏன் இந்தளவுக்குக் குறைந்தது என்றால் அமெரிக்க பெடரல் வங்கி சிம்போஸியம் ஒன்றை வைக்கவுள்ளனர். அமெரிக்க வட்டி விகிதம் குறையுமா குறையாதா என்பதை ஆலோசிக்கப் போகிறார்கள். ரேட் அதிகரிக்காது எனப் பலரும் கருதுவதால் டாலர் வலுவடைந்துள்ளது. இதனால் தங்கம் விலை சரிந்துள்ளது” என்று தெரிவித்தார்.
புவிசார் அரசியல்
அதேபோல மற்றொரு வீடியோவில் புவிசார் அரசியலை விளக்கிய அவர், “உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாக வெள்ளை மாளிகை சொல்கிறது. சீனா எப்போதுமே ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்கும்.. இப்போதும் வாங்குகிறது. ஆனால், இந்தியா கடந்த காலங்களில் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்காமல் இருந்ததாக அமெரிக்கா சொல்கிறது.
இருப்பினும் உக்ரைன் போர் தொடங்கியவுடன், எண்ணெய் மலிவாகக் கிடைக்கிறது என அங்கு வாங்கி, சுத்திகரித்து அதை அதிக லாபத்திற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் தான் அதை நாங்கள் எதிர்க்கிறோம். எனவே, சீனாவையும் இந்தியாவையும் ஒரே போல பார்க்க முடியாது என அமெரிக்கா சொல்லியுள்ளது. மேலும், இம்மாத இறுதியில் கூடுதலாக 25% வரி அமலுக்கு வரும் எனச் சொல்லியுள்ளது இந்தியா சீனா உறவு மறுபுறம் இந்தியா சீனா நெருங்கி வருகிறது. கல்வான் மோதலுக்கு முந்தைய நிலைக்குச் செல்லவில்லை என்றாலும் இப்போது பரவாயில்லை. பிரம்மபுத்ரா மீது சீனா பெரிய அணை கட்டுகிறது. ஆனாலும், வேறு வழியில்லாமல் நாம் சீனாவுடன் உறவைப் புதுப்பித்துள்ளோம். ஏனென்றால் ரேர் எர்த் மெடல் தேவை, சிறப்பு உரம் ஆகியவற்றை சீனாவில் இருந்து நாம் வாங்குவதில் பிரச்சினை இருந்தது. இப்போது அவை சீராகியுள்ளது” என்றார். இதுபோல புவிசார் அரசியல் சிக்கலும் சீராவதால் தங்கம் விலை மேலும் குறையவே வாய்ப்பு இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
