மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ள தவெக மாநாட்டின் பாதுகாப்பு பணியில் சுமார் 500 பெண் பவுன்சர்கள் ஈடுபடுகின்றனர். போலீசாருக்கு உதவியாக ஆண் பவுன்சர்களோடு, பெண் பவுன்சர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் என ஏராளமான வசதிகளை அக்கட்சி மேலாண்மை குழு ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டு திடலில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் மக்களுக்கு அவசரத் தேவைக்கான மருந்துப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் திடலில் மொத்தம் 40 அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலை நேரில் பார்வையிட்ட மதுரை எஸ்.பி ஆனந்த், மாநாடுக்கான பாதுகாப்பு, நெரிசல் தவிக்கும் விதமாக வழித்தடங்கள் மாற்றும் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாட்டுக்கு வரும் வாகனங்கள், மாநாட்டு திடலை கடந்து செல்லும் பிற வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமாக தயாராகி உள்ளஇந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பங்கேற்பதற்காக தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்றே தவெக தொண்டர்கள் ஏராளமானோர் மாநாடு நடைபெறும் திடலில் திரண்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக வெளியூர்களில் இருந்தும் போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள், 500 பெண் பவுன்சர்களும் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
தவெக மாநாட்டில் ஏராளமான பெண்களும் பங்கேற்க உள்ளனர் என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு பணியில் பெண் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பவுன்சர் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நேற்று இரவு மாநாட்டு திடலில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு உடை அணிந்த பெண் பவுன்சர்கள், தவெக மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
